SHARE


இலங்கை இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்ட இருவரின் சார்பாக, வவுனியா உயர் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்த பதில் நீதவானும் மூத்த சட்டத்தரணியும் ஆகிய திருமதி மனோன்மணி சதாசிவம் அவர்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மனித உரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாடு பதிவாகி உள்ளது. 

முதலாவது முறைப்பாட்டாளரான சிவராசா நந்தகோபன் அவர்களின் தந்தையான சின்னையா சிவராசா 30.02.2000 அன்று இலங்கை கடற்படையினால் “City of Trinco” கப்பலில் பயணிக்கும் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். இவர் பற்றி இன்றுவரை தகவல் கிடைக்காத்தால், இவரது மகன் சிவராசா நந்தகோபன் சார்பாக, முதலாவது ஆட்கொணர்வு மனு (HCV/writ/537/20) திருமதி மனோன்மணி சதாசிவம் அவர்களால் 04.03.2020 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

இரண்டாவது முறைப்பாட்டாளரான மாணிக்கம் ரமேஸ்கரன் அவர்களின் சகோதரனான, மாணிக்கம் ரமணிகரன் 2009 இறுதி யுத்தத்தின்போது, இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். மாணிக்கம் ரமேஸ்கரன் சார்பாக, இரண்டாவது ஆட்கொணர்வு மனுவை (HCV/writ/538/20) திருமதி மனோன்மணி சதாசிவம் 06.03.2020 அன்று தாக்கல் செய்திருந்தார். 

இந்த முறைப்பாடுகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து, திருமதி மனோன்மணி சதாசிவம் அவர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்புக்களை மேற்கொண்ட இனந்தெரியாத நபர்கள் அந்த மனுக்களை வாபஸ் பெறுமாறு அச்சுறுத்தியுள்ளனர். இதன்காரணமாக, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, திருமதி மனோன்மணி சதாசிவம் அவர்கள், வவுனியா மனித உரிமை செயலகத்தில் எழுத்துமூல முறைப்பாடு ஒன்றை வழங்கியுள்ளார். 

இவர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பிலும் செயற்பட்டவர் என்பதும், அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சாளரான சுமந்திரன் தமிழ் மக்களுக்கு செய்துவரும் துரோகங்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி, அவரை பதவி விலகும்படி கோரும் கையெழுத்து போராட்டத்தை ஆரம்பித்திருந்தார் என்பதும் குறிப்படத்தக்கது. 

இவ்வாறாக, இலங்கையில் சட்டத்தரணிகள் மீதான தாக்குதல்கள், கொலைமிரட்டல்கள், கைதுகள் அண்மையில் அதுகரித்து இருப்பது வருத்தத்துக்கு உரியது.

Print Friendly, PDF & Email