SHARE
அற்புதன்
அரசியல் ஆய்வாளர்

ஈழ விடுதலைப் போராட்டம் வைகாசி 2009 உடன் நிறைவுக்கு வந்துவிட்டதா? இல்லையா? என்ற குழப்பத்தில் இருப்போருக்கு பதில் தரும் வகையில் இவ்வாக்கம் அமைகின்றது.  இவ்வாறு சிந்திப்போருக்கு பதில் வழங்க வேண்டுமென்றால் ஈழ விடுதலை போராட்டத்தை நாம் ஒரு வரலாற்று நூலாக வெளியிட வேண்டும். 

எமது வரலாற்று நூல்கள் காலத்திற்கு காலம் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வந்தமை அனைவரும் அறிந்த ஒன்றே.  குறிப்பாக யாழ் நூலக எரிப்பு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.  எமது வரலாற்றை நாம் நூல் வடிவில் வெளியிட தவறும் சந்தர்ப்பத்தில், அது திரிபு அடைவதை யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும்.  மேலும், இளம் சந்ததியினர் இந்த திரிபு கதைகளை நம்பி தவறான பாதையில் செல்லக்கூடும்.  தமிழ் வரலாற்று ஆசிரியர்களிடம் அப்பணியை செய்யும்படி உரிமையுடன் கேட்டுக்கொண்டு, எமது கருப்பொருளுக்குள் உட்செல்வோம். 

ஈழ விடுதலைப் போராட்டம் என்பது இலங்கைத் தீவு சுகந்திரம் அடைந்த காலம் முதல் பல்வேறு பரிமாற்றங்களை அடைந்துள்ளது.  இதனுடைய முதல் அத்தியாயமாக எமது அகிம்சை வழிப் போராட்டம் அமைந்தது. பல்வேறுபட்ட அடக்குமுறைகளுக்கு எதிராக எமது தமிழ்த் தலைமைகள் குரல் கொடுத்தனர். 

மக்கள் சக்தியுடன் இந்த அகிம்சை போராட்டத்தின் தலைவராக தந்தை செல்வா அவர்கள் மிகப்பெரும் பங்காற்றினார். “ஈழத்து காந்தி” என்ற சிறப்பு பெயரும் அவருக்கு உண்டு.  இருப்பினும், சிங்கள தேசம் எமது அகிம்சை வழிப் போராட்டத்தை மதிக்கவில்லையென்பது மட்டுமல்ல தமது அரச பயங்கர வாதத்தை எம்மவர்கள் மீது கட்டவிழ்த்தும் விட்டது. 

தமிழ் மக்களின் உரிமைக் குரல்கள் சிங்கள அரசின் கோரக்கரங்களாலும் அவர்களினால் ஏவி விடப்பட்ட காடையர்களினாலும் நசுக்கப்பட்டன. தமிழ் மக்கள் தனி ஈழ கோரிக்கைக்கான ஆணையை நடந்த தேர்தல் மூலம் வழங்கியமையை பொறுத்துக்கொள்ளாத சிங்கள அரசு அப்பாவி பொதுமக்கள் மீது வன்முறையை மீண்டும் கட்டவிழ்த்து விட்டது. 

ஒரு கட்டத்தில், தந்தை செல்வா அவர்கள் “தமிழரை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென்று” கூறுமளவுக்கு வன்முறைகள் சிங்கள அரசினால் அரங்கேற்றப்பட்டன. இந்த கொடூர அரச பயங்கரவாத தாக்குதலினால் எம்மவர்கள் பலியாவதை தடுக்கும் நோக்கில் எமது இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்ற அழைப்பு பலர் மட்டத்தில் இருந்தும் எழுந்தன.  இதுவே ஈழ விடுதலைப் போராட்டத்தின் இரண்டாவது அத்தியாயம் பிறப்பெடுப்பதற்கு காரணமாகின்றது..

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட ஈழ விடுதலை போரின் இரண்டாவது அத்தியாயத்தில், பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தம் இனம் காக்க வெகுண்டெழுகின்றனர்.  வடக்கு கிழக்கு மக்கள் தமிழ் ஈழமே தீர்வென வாக்களித்தமையால், அவர்கள் மீதான வன்முறைகள் சிங்கள பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக கட்டவிழ்த்துவிடப்படுகிறது.  இச் சந்தர்ப்பத்திலேயே  எமது இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்துவதற்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

பிற்காலங்களில், “நாம் எந்த ஆயுதத்தை எடுப்பது என்பதை எமது எதிரியே தீர்மானிக்கின்றான்” என்றும் “நாம் ஆயுதங்களை விரும்பி தரித்து கொண்டவர்களும் அல்ல வன்முறை பிரியர்களும் அல்ல” என்று மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கூறுவதற்கும் இதுவே காரணமாக அமைந்தது. இவற்றில் இருந்து வன்முறை எம்மீது திணிக்கப்பட்டது என்பது தெளிவு.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட ஈழ விடுதலைப் போராட்டம், வெறுமனே ஆயுதத்தில் மட்டும் நாட்டம் கொண்டதாக அமையவில்லை.  மாறாக, நாம் சனநாயாக வாதிகளே என்பதை உலகிற்கு எடுத்து காட்டும் முகமாக “திம்பு தொடங்கி ஜெனிவா” வரை நடந்த சமாதான பேச்சுக்கள் எடுத்தியம்புகின்றன.  தமிழ் மக்கள் தம்மை தாமே நிர்வாகிக்க கூடிய ஓர் சுயநிர்ணய உரிமையை நோக்கிய புனித பயணமாக இந்த அத்தியாயம் அமைந்தது.  இருப்பினும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமக்கான நீதி கிடைக்க கூடாது என்பதில் சிங்கள தேசம் கண்ணும் கருத்துமாக இருந்தது. 

இலங்கையின் தென்பகுதியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் தீர்வு விடயத்தில் நியாயத்தன்மையுடன் செயற்படுபவர்களாக இருக்கவில்லை.  சிங்கள தேசத்தால் முன்வைக்கப்பட்ட தீர்வு திட்டங்களில் நாம் எதிர் பார்த்தது கிடைக்கா விடினும் எமக்கு சற்று ஆறுதல் தரும் வகையில் அமைந்தது சந்திரிகா பண்டாரநாயக்க அவர்கள் சனாதிபதியாக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட தீர்வு திட்டமே. ஆனால், இத் தீர்வு திட்டமும் தம்மை சிறுபான்மை மக்களுக்கு நல்லவர்கள் போன்று காட்டி கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சியினால் கிழித்தெறியப்பட்டமை வரலாறு. 

காலம் காலமாக சிங்கள தலைமைகளால் நாம் ஏமாற்றப்படுகின்றோம் என்பதை உணர்ந்த தமிழ் மக்கள் தமது ஏகப் பிரதிநிதியாக தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை ஏற்று 2004 இல் நடந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தனர்.  இது தமிழ் மக்களினால் சனநாயக முறையில் வழங்கப்பட்ட இரண்டாவது ஆணை.  முதலாவது ஆணை தமிழ் ஈழ வாக்கெடுப்பிற்காக 1977 இல் வழங்கப்பட்டிருந்தது. 

இவ்விரு மக்கள் ஆணைகளும் மிகவும் வலிமை வாய்ந்தவை என்பதை நாம் மறந்து விடலாகாது.  மக்களினால் வழங்கப்பட்ட இவ்விரு ஆணைகளையும் சிரம் மேற்கொண்டு தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தமது விடுதலைப் போரை 2009 வரை முன்னெடுத்தனர்.  இவ் அத்தியாயம் தமிழ் மக்களுடைய நியாயமான கோரிக்கையை சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது. 

இவ்விடத்தில் (வைகாசி 2009) இல் இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்தின் மூன்றாவது அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது.  தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை அழித்தால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு நியாயமான தீர்வினை தாம் வழங்குவோம் என்று சர்வதேசங்களுக்கு உத்தரவாதம் வழங்கிய அன்றைய இலங்கை சனாதிபதியும் இன்றைய பிரதமருமான மகிந்த இராஜபக்ச, இறுதி யுத்தம் முடிவுற்று 11 வருடங்களாகியும் தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்கவில்லை. 

இதில் குறிப்பிடக்கூடிய விடயம், இந்த 11 வருடத்திலும் இலங்கையின் இரு பெரும் கட்சிகளும் ஆட்சியில் இருந்துள்ளன. அதிலும் ஐக்கிய தேசிய கட்சியும் இலங்கை சுகந்திர கட்சியும் இணைந்து நான்கரை வருடங்கள் ஆட்சி அமைத்திருந்தன.  இலங்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்த காலத்தில் வழங்க முடியாத அரசியல் தீர்வினை இனிவரும் காலங்களில் வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதும் மக்களை நம்ப வைப்பதும் அவர்களை ஏமாற்றும் செயலாகவே கருத முடியும்.

தமிழ் மக்களின் விடுதலைக்கான போரை பயங்கரவாதம் என்று பரப்புரை செய்த சிங்களம், தமது அரச பயங்கரவாதத்தை இன்றுவரை அரங்கேற்றி கொண்டிருக்கின்றது.  தற்பொழுது இலங்கையின் சனாதிபதியாக இருக்கும் கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் பிரச்சினை இல்லை என்று தாம் பதவிக்கு வந்த ஆரம்பத்தில் அறிவித்திருந்தார்.  

இன்றுவரை சமஷ்டி என்றால் பிரிவினை வாதம் என்று சிந்திக்கும் சிங்கள தேசம் தமிழ் மக்களுக்கு உரிய அதிகார பகிர்வை வழங்குமா என்று சிந்திக்க வேண்டும். இலங்கை அரசியல் யாப்பில் இருக்கும் காணி மற்றும் காவல் துறை அதிகாரங்களை பயன்படுத்துவதற்கான அனுமதியைக்கூட சிங்கள தேசம் தரமறுக்கின்றது. 

சர்வதேச ஒப்பந்தங்களில் ஒன்றான இலங்கை அரசியல் யாப்பின் 13 ஆம் திருத்தத்தில் காணப்படும் வடக்கு கிழக்கு இணைப்பு இலங்கை நீதி மன்றத்தினால் இல்லாது ஆக்கப்பட்டமை இலங்கையின் நீதித்துறை சிறுபான்மை மக்கள் விடயத்தில் எவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை தெளிவாக காட்டுகின்றது.  இவ்வாறிருக்க , இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளுக்கு உரிய தீர்வை இலங்கையின் நீதிமன்ற பொறிமுறை தந்துவிடப் போவதில்லை. 

அப்படியென்றால் தீர்வு தான் என்ன என்று வாசகர்கள் கேட்பது தெரிகின்றது.  நாம் காலத்துக்கும் அடிமை வாழ்க்கை வாழ்வதற்காக எமது வரலாற்றின் முதல் இரு அத்தியாயங்களும்  அரங்கேறவில்லை.  பல உயிர் இழப்புக்கள், அர்ப்பணிப்புக்கள் தியாகங்கள் எமது உரிமையை பெறுவதற்கே நடந்தேறின. 

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு அளப்பரியது.  எமது விடுதலைக்காக போராடிய விடுதலை அமைப்பை தடை செய்தது இதில் ஒன்று. ஆகவே, அவர்கள் கதவுகளை ஓங்கித் தட்ட வேண்டிய தேவை எம் அனைவருக்கும் உண்டு. எமக்கான நியாமான தீர்வினைப் பெற்றுத்தருவதில் இந்த சர்வதேசங்களுக்கு முக்கிய பங்குள்ளது.  தாமதிக்கும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு நிகர் என்பதை அவர்களுக்கு எடுத்தியம்ப வேண்டும்.   

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை ஓர் அமைப்பாக சிந்திப்போருக்கு நாம் உரக்கச் சொல்லவேண்டியது அது ஒரு அமைப்பு அல்ல, அது தமிழ் மக்களின் ஆத்ம பலம்.  தமிழ் மக்களின் ஆத்ம பலம் இன்னும் உயிர்ப்புடனேயே இருக்கின்றது.  அது எமக்கான நீதி கிடைக்கும் வரை அப்படியே இருக்கும்.  அவர்களின் ஆத்ம பலத்தினை முன்கொண்டு சென்றவர்களே தந்தை செல்வாவும் மேதகு வே. பிரபாகரன் அவர்களும் ஆவர்.

மேலும், ஈழத்தில் இருக்கும் தலைமைகளும் புலத்தில் செயற்படும் செயற்பாட்டாளர்களும் ஒருமித்த கருத்துடன் பயணிக்க வேண்டும். தமிழ் மக்களுக்குரிய நியாயமான தீர்வினை நாம் இவ் அத்தியாயத்தில் பெற்றுக் கொள்வதே எமது குறிக்கோள்.  மேலும், வெற்றி தோல்விகளுக்கப்பால் சர்வதேச நடுநிலையுடன் நடைபெற்ற அனைத்து பேச்சுவார்த்தைகளும் இலங்கையில்  இனப் பிரச்சனை உண்டென்பதையும் இரு தேசங்கள் உண்டென்பதற்கான அங்கீகாரமாக இருக்கின்றன. 

ஆகவே, முள்ளிவாய்க்காலுடனும் விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்புடனும் எமக்கான விடுதலைப் போர் முற்றுப் பெற்றுவிட்டதென்றால் அது அறிவிலிகள் கூறும் கருத்து.  உண்மையில் அது சர்வதேச மயப்பட்டிருக்கின்றது என்பதே யதார்த்தம், அதற்கான களமுனையை திறந்து விட்டதே வைகாசி 2009.  ஆகவே, ஈழ விடுதலைப் போராட்டம், தமது இலக்கை எட்டும் வரை தொடரும். இதற்கு ஈழமும் புலமும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டும்.

Print Friendly, PDF & Email