SHARE

மன்னார், தாராபுரம் கிராமம் கடந்த 7 ஆம் திகதியில் இருந்து முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில் கிராமத்தை முழுமையாக விடுவிக்குமாறு உரிய அதிகாரிகளிடம் கோரியுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு எவ்வித வைரஸ் தொற்றும் இல்லை என மருத்துவ அறிக்கை வந்துள்ள நிலையில் இன்று முதல் முழுமையாக விடுவிப்பதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “தாராபுரம் கிராமத்தில் 2 கிராம அலுவலகர்கள் பிரிவைக் கொண்ட பகுதி முழுமையாக முடக்கப்பட்டிருந்தது.

புத்தளத்தில் இருந்து வருகைதந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றிற்கு உள்ளான காரணத்தினால் குறித்த தாராபுரம் கிராமம் கடந்த 7 ஆம் திகதியில் இருந்து முழுமையாக முடக்கப்பட்டிருந்தது.

வைத்திய அதிகாரியின் அறிக்கையின்படி குறித்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு பிரச்சினை இல்லை என்ற நிலையில் உரிய அதிகாரிகளுக்கு குறித்த கிராமத்தை இன்று முதல் முழுமையாக விடுவிப்பதற்கு கோரியிருக்கிறேன்.

அதனடிப்படையில் தாராபுரம் கிராம மக்களும் முழுமையாக விடுவிக்கப்படவுள்ளனர். எமது மாவட்டத்தைப் பொறுத்த வகையில் கொரோனா வைரஸின் பாதிப்பு இது வரையில் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email