SHARE

கட்சி நலன்களை முன்னிறுத்தி எந்த முன் நிபந்தனைகளையும் விதிக்காமல் மக்களின் இன்றைய அவல நிலையைக் கவனத்தில் கொண்டு கட்சிகள் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலான புதிய கூட்டணி தொடர்பிலான முயற்சிகள் தோல்வியடைந்தமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “எதிர்காலத்தில் தவறுகள் விடுவதில்லை என்றும் தமிழ் மக்களின் அபிலாஷைகளே எமது மூச்சு என்ற பிரக்ஞையின் அடிப்படையிலும் பரஸ்பர நம்பிக்கை, இறுக்கமான ஒழுக்கவிதிகளுடன்தான் நாம் செயற்படவேண்டும்.

புதிய கூட்டணி தொடர்பான முயற்சியில் எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை. அதேசமயம் இதனால் முன்னேற்றமும் காணப்படவில்லை.

கூட்டணி விடயத்தில் நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. நல்ல ஒரு நோக்கத்துக்காகவும் மக்களின் நன்மைக்காகவுமே இந்த சந்திப்பு முயற்சி ஏற்பாடாகி இருந்தது. ஆனால், தவறான அணுகுமுறைகளினால் இது சாத்தியமாகாமல் போயுள்ளது” என கூறினார்.

Print Friendly, PDF & Email