SHARE

அரசியல் கைதிகளின் விடுதலை என்பதனை சட்டபிரச்சனையாக பார்க்காது, அரசியல் பிரச்சனையாக பார்க்கப்பட்டு அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முடிவெடுக்கப்பட வேண்டும் எனவும், அது வரையில் அரசியல் கைதிகளிடம் இருந்து அவர்களின் போராட்டத்தை நாம் பொறுப்பெடுக்க வேண்டும் என முதலமைச்சர் தலைமையில் கூடிய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதன் பிரகாரம் நாளைய தினம் சனிக்கிழமை அநுராதபுர சிறைச்சாலைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள அரசியல் கைதிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் இந்த வாக்குறுதியை வழங்கி அவர்களின் போராட்டத்தை முடித்து வைப்பதாக தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

யாழ்.கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முடிவெடுப்பதற்காக அனைத்து தரப்பினருக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டு கூட்டம் கூட்டப்பட்டது.

இருந்த போதிலும் குறித்த கூட்டத்தில் புளெட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் , வடமாகாண சபை உறுப்பினர்களான பொ. ஐங்கரநேசன் , பா. கஜதீபன் , அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா. சக்திவேல் உட்பட சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குறித்த கூட்டம் முதலமைச்சர் தலைமையில் காலை 11 மணியளவில் ஆரம்பமானதை அடுத்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமது கருத்துக்களை முன் வைத்தனர்.

Print Friendly, PDF & Email