
காணாமல் போன யாழ்.கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரும் ஆதவன் என அழைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலி அரசியற்துறை நிதிப்பிரிவின் முன்னாள் பொறுப்பாளருமான மாணிக்கம் ஜெயக்குமார் இன்று மாலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சண்டிலிப்பாயைச் சேர்ந்த 51 வயதான இவர் கடந்த 28.09.21 அன்று காலை 6 மணிக்கு உடற்பயிற்சிக்காக சென்றிருந்த போதே காணாமல் போயிருந்தார் என முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் இரு நாட்களின் பின்னர் இன்று (30) நவாலிப்பகுதியில் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலத்தில் அடிகாயங்கள் காணப்படும் நிலையிலும் இது திட்டமிட்டு கடத்தப்பட்ட கொலையாகவே வெளிப்படும் நிலையில் இதனை வேண்டுமென்றே மூடிமறைக்கும் நோக்கில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் என்ற அபத்தமான கருத்துக்கள் தற்போது வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.
தவிர மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் எவ்வாறு தினமும் காலையில் வழமையாக நடைப்பயிற்சி செய்ய முடியும் என்ற கேள்வி எழும்புவதுடன் சண்டலிப்பாயில் வசிக்கும் அவர் பல ஊர்கள் கடந்து நவாலியில் உள்ள கிணறொன்றில் இறந்து கிடக்க முடியும் என்ற பெரும் கேள்வி எழும்புவதும் தவர்க்கமுடியாதது. அத்துடன் அவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த போது நன்கு நீச்சல் தெரிந்த ஒருவர் எனவும் அப்போது அவர்கூடவே பயிற்சிகள் பெற்ற நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஊடகங்கள் சிலவும் அவர் முன்னாள் போராளி என்பதை மறைத்து அரசிற்கு சார்பாக வெறுமனே ‘அபிவிருத்தி உத்தியோகத்தர் காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்டார்’ அவர் ‘6 மாதங்களிற்கு முன்னர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்’ என வழமையான செய்தியாக்கியிருக்கிறார்கள். அவர் காணமல் போவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவருடன் கதைத்த பல நண்பர்கள் அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கவில்லை. அவர் நன்றாகவே தங்களுடன் கதைத்தார் என உறுதிப்படுத்தியுள்ள நிலையிலும் கோத்தபாய அரசின் கீழ் தற்போது முன்னாள் போராளிகள் இலக்குவைக்கப்பட்டு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் மாணிக்கம் ஜெயக்குமாரின் கொலையையும் மூடிமறைக்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது வருந்தத்தக்கது.
